2820. கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
       கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனு மாமல ரோனும்
     மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே. 9                                         

     9. பொ-ரை: மணம் பொருந்திய கூந்தலையும், ஒளி
பொருந்திய வெண்ணிறப் பற்களையும், கொவ்வைக்கனி போன்ற
வாயினையும், கொடி போன்ற அழகிய இடையையும் உடைய
உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய
மார்பினையுடையவராய், கார்மேக வண்ணனான திருமாலும், தாமரை
மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி
படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும்
இடம், வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது
மிதந்த நற்பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக!

     கு-ரை: கொங்கு-வாசனை. நிழல்-ஒளி. கொவ்வைவாய்-
கொவ்வைக் கனி போன்றவாய். கொவ்வை-முதலாகுபெயர். கொடி
ஏர் இடை-பூங்கொடிபோன்ற இடையுடையவளுமாகிய. உமை
பங்குசேர் திருமார்புடையார்-உமாதேவியார் ஒரு பாகம் பொருந்திய
சிறந்த மார்பையுடையவர். படர்தீ-படருகின்ற தீ. மங்குல்-மேகம்.
வான்மிசை-ஆகாயத்தின் இடம் வரை. வந்து பரவி-வந்து எழும்பிய.
பொங்கும்நீரில்-பொங்கிய ஊழி வெள்ள நீரிலே. மிதந்த நற்பூந்தராய்
என்க. 10,