| 
         
          | 3059. | அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட |   
          |  | நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப்
 பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.    8
 |  
       
             8. 
        பொ-ரை: பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி
 இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார். பின் அவன்தன்
 தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட,
 கூர்மையான வாளை அருளினார். திருக்கழுமலம் என்னும் வள
 நகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு
 பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        அரக்கனார் அருவரை எடுத்தவன் - முதலில் உயர்த்திப்பின் எடுத்தவன் எனத் தாழ்த்திக்கூறிய நயத்தை
 "எனைத்துணையர் ஆயினும் என் ஆம்" என்னுந் திருக்குறளோடு
 ஒப்பிட்டுக் காண்க. நீடியாழ் - நீடு + யாழ் - நெடியவீணை,
 வீணையாற்பாட. கருக்கு - முனை; கூர்மை. பெருக்கும் நீர் அவள்
 - அன்பர்க்குத் திருவருளைப் பெருக அளிக்கும் தன்மையுடையவள்;
 என்பது "அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள்"
 என்ற திருவெம்பாவைப் (தி.8) பாடற்கருத்து.
 |