3175. ஊறினா ரோசையுள் ஒன்றினா ரொன்றிமால்
  கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.     6

     6. பொ-ரை: இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர்.
எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர். திருமாலை ஒரு கூறாகக்
கொண்டவர். குமரக்கடவுளின் தந்தை. அப்பெருமானார்
வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம், குரோதம்,
உலோபம், மோகம், மதம், மாச்சரியம் இவற்றைக் களைந்து,
நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை
அடக்கி, மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி,
சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும்
திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.

     கு-ரை: பொய்யகத்து ஆறினார் - பொய்ப்பொருள்கள்
மேற்செல்லும் அவா அடங்கினவர். ஐ உணர்வு - ஐந்தாகிய
உணர்வு மனம், ‘அஃது எய்தலாவது, மடங்கி ஒருதலைப்பட்டுத்
தாரணைக்கண் நிற்றல்’. (திருக்குறள் 354 பரிமேலழகருரை.) இவை
எய்திய வழியும், மெய்யுணர்வு இல்லாவிடத்து வீடுபய வாமையின்
மெய்தேறினார் என்றருளினர். மெய்தேறுதல் - சிவனே
பரம்பொருளெனத் தெளிதல்.