3257. மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
  பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர்போற்ற இருக்குமே.           3

     3. பொ-ரை: நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை
உடையவரும், வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி,
படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும், இளமான்கன்றை
இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான்,
அந்தணர்கள் போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: பை - படம், அரவு ஆட்டும், படிறனார்; வஞ்சகர்,
அரவு ஆட்டும். மான்மறி - மான்கன்று. மை - கருமைநிறம்,
கண்டத்தர் சென்னியர், படியறனார், மான்மறியார். குறிப்பு:-
இன்னதெனத் தோற்றாமையால் படிறனார் என்றார். அதன் கருத்து
இத்திருமுறை (தி.3 ப.107.பா.10.) காண்க. தலைவனாய் முனிவர்
போற்ற இருப்பர் என முடிக்க. ஒருமை பன்மை மயக்கம்.