3382. அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
  தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை                               தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு
                              மன்றே.     11

     11. பொ-ரை: சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு
மட்டுமன்றி, மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்தருளியவர். சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத்
தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில்
உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின்
மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல, வையையாற்றை
எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில், இடபவாகனத்தின்
மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும்.
ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு.
ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும்,
அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத
நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும்.

     கு-ரை: அற்றன்றி... அன்றே என்றது:- மதுரையிற் சங்கம்
வைத்தருளியவனும், சிவனேபரம் என்று தோற்றவும் தேறாத
சமணர்கள் தெளிய, வையையிலிட்ட ஏடு எதிர்ந்துசெல்ல
வைத்தவனுமாகிய பெருமானல்லனோ இறைவன் என்னத்தக்கவன்.
ஆதலின் அவனுக்கே அன்பு செலுத்தத்தக்கது என்றவாறு.