3417. பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு
       பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங்
     கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற்
     சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி
     யமர்ந்தவனே.                   2

     2. பொ-ரை: சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய
திருமார்பில் முப்புரிநூல் அணிந்து, பூங்கொடி போன்ற மெல்லிய
சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான்.
நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய
திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி
வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: கொடி அன சாயலாள் - பூங்கொடிபோன்ற தோற்றப்
பொலி வினை உடையவள். கூடுவதே - கூடுவது தகுமா? கடிமணம்
- புது வாசனை. அடிகள் நக்கன் - அடியராகிய திருநீல
நக்கநாயனார். பரவ அயவந்தி அமர்ந்தவனே.