3428. ஓத்தர வங்களோடு மொலி காவிரி
       யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகை கொண்டடி
     போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழ கன்குட
     மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய விருந் தானவ
     னெம்மிறையே.                   2

     2. பொ-ரை: வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு, காவிரியாறு
பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க, பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில்
மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி, தூபதீபம் காட்டி
இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க, திருநடனம்
புரியும் அழகனாகிய சிவபெருமான், திருக்குட மூக்கினை இடமாகக்
கொண்டு வீற்றிருந்தருளுகின்றான். எல்லோரும் போற்றி வணங்கும்
புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: ஓத்து - வேதங்களின். அரவங்களோடு -
ஓசைகளுடனே. ஒலி - எதிர் ஒலியாக. ஆர்த்து - தானும்
ஆரவாரித்து. அயலே - அருகிலுள்ள பூந்தோட்டங்களில். பூத்து -
மலர்ந்து இருக்க (அம்மலர்களையும்) புகை - நறும்புகைகளையும்,
பிற பூசைத் திரவியங்களும் கொண்டு. அரவங்களோடும் - (சிவ;
போற்றி என்னும்) ஓசைகளோடும். (திருக்கோயில் வந்து)
மெய்யடியார்கள் அடிபோற்றி - திருவடியைப் போற்றி வழிபாடு
செய்ய. நல்ல கூத்து - நன்மை பயக்கும் கதை தழுவி வரும்
கூத்தும் சிறந்த நாட்டியமும், உண்டாகும் அரவங்கள். ஓவா -
நீங்காத. குடமூக்கு இடமாக. ஏத்து - துதித்தலின். அரவங்கள்
செய்ய இருந்தான். பூத்து வினையெச்சத் திரிபு.