| 
         
          | 3464. | விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை |   
          |  | மங்கையொடும் நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை
 சேருமிடம்
 படம்புரி நாகமொடு திரை பன்மணி
 யுங்கொணரும்
 தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
 யீச்சரமே.                       5
 |  
            5. 
        பொ-ரை: சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன். வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு
 நள்ளிருளில் திருநடனம் புரிபவன். எங்கள் தலைவனான
 சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம், படமெடுத்தாடும்
 பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு, அலைகள் பலவகையான
 மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய
 மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள
 திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.
       கு-ரை: 
        இருள் - மகாசங்கார காலத்தில் எங்கும் இருள் மயமாய் இருத்தலின் இருள் என்றார். (அக்காலத்தில் நடம்புரிவர்
 என்பர்) இதனை நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
 (திருவாசகம். 1. அடி. 89) காண்க. இறைவி காண்பவளாய்த் தான்
 ஆடுபவனுமாய் அமைதலின் வெள்வளை மங்கையொடும் நடம்புரி
 கொள்கையினான் என்றார். படம்புரி - படத்தை விரிக்கின்ற;
 நாகம். புரிதல், செய்தல், பொதுவினை சிறப்பு வினைக்கு ஆயிற்று.
 நாகமொடு - நாகரத்தினங்களுடன் (பல இரத்தினங்களையும்)
 அலை - அடித்து வரும். தடம் புனல் - பெருமை பொருந்திய
 காவிரி நீர் சூழ்ந்த; திருப்பனந்தாள். தடவுங் கயவும் நளியும்
 பெருமை (தொல்காப்பியம் - சொல். 320.)
 |