| 
         
          | 3467. | செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர |   
          |  | லாலடர்த்து முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன்
 மும்மையினான்
 புற்றர வம்புலியின் னுரி தோலொடு
 கோவணமும்
 தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
 யீச்சரமே.                       8
 |        8. 
        பொ-ரை: இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன். முற்றும் திருவெண்ணீறு
 அணிந்த திருமேனியுடையவன். உருவம், அருவம், அருவுருவம்
 என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன். புற்றில் வாழ்கின்ற
 பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் ஆடையாக
 உடுத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள்
 என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும்
 திருக்கோயிலாகும்.
       கு-ரை: 
        திரு மெல் விரலால் அடர்த்து - அரக்கன் வலியைச் செற்று. அழித்து என மாற்றுக. அரவம் கோவணமும், புலியின்
 உரித்த தோலை (உடையும்) ஆக. தற்றவன் - உடுத்தியவன்.
 கோவணமும் என்ற இலேசால் உடையும் என ஒரு சொல் வருவிக்க.
 தற்றுதல். உடுத்தல். மடி தற்றுத் தான் முந்துறும் (குறள் - 1023.)
 மேனியன் மும்மையினான் என்றது உரு, அரு, அருவுருஆம்
 மேனியை - உருமேனி தரித்துக் கொண்டதென்றலும் உருவி றந்த,
 அருமேனியதுவும் கண்டோம் அருவுரு வானபோது, திருமேனி
 யுபயம் பெற்றோம் (சிவஞானசித்தியார் சுபக்கம் - 55.)
 |