| 
         
          | 3504. | பாய்திமிலர் வலையோடு |   
          |  | மீன்வாரிப் 
            பயின்றெங்கும் காசினியிற் கொணர்ந்தட்டுங்
 கைதல்சூழ் கழிக்கானல்
 போயிரவிற் பேயோடும்
 புறங்காட்டிற் புரிந்தழகார்
 தீயெரிகை மகிழ்ந்தாருந்
 திருவேட்டக் குடியாரே.              2
 |  
            2. 
        பொ-ரை: வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில், வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப்
 பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த
 கழியுடைய சோலை விளங்க, நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு
 சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான்
 திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான்.
       கு-ரை: 
        பாய் - (நீரிற்) பாய்கின்ற. திமிலர் - வலைஞர். எங்கும் பயின்று - கடலின் எப்பக்கங்களிலும் திரிந்து. காசினியில்
 கொணர்ந்து - நீரிலிருந்து தரைக்குக் கொணர்ந்து. அட்டும் -
 குவிக்கும். கைதல் - தாழை. கழிக்கானல் - கழியருகேயுள்ள
 கடற்கரைச் சோலையையுடைய. திருவேட்டக்குடியார். இரவில்
 புறங்காட்டில் போய்ப் பேயொடும். புரிந்து - நடனமாடிய. அழகு
 ஆர் - அழகையுடைய. தீ - தீக்கும் (கறுக்கும்). எரி -
 நெருப்பை. கை மகிழ்ந்தார் - கையின்கண் விரும்பியேற்றவர்.
 புரிந்து என்ற பொதுவினை சிறப்பு வினையைக் குறித்தது.
 |