3523. |
பாழியுறை வேழநிகர் பாழமணர் |
|
சூழமுட
லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள்
வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொண் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகி
லூழிவளர் காழிநகரே. 10 |
10.
பொ-ரை: பாழியில் தங்கும், யானையை ஒத்த
சமணர்களும், கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய
பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின்
இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக்
கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், கீழுலகில்
புகழ்கொண்ட அரசர்களும், மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய
இந்திரனும், மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம்
புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று, தன் குற்றம் நீங்குமாறு
அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல்
சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும்
பெருமையுடைய காழிநகராகும்.
கு-ரை:
பாழி உறை - பாழியில் தங்கும், வேழம் நிகர் -
யானையை யொத்த, பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும்.
சூழும் - கூட்டமாக உள்ள, உடல் ஆளர் - உடலைப்
பாதுகாப்போராகிய பௌத்தர்களும், உணரா - உணராத, ஏழின்
இசை - ஏழு சுரங்களையுடைய, யாழின்மொழி - யாழ் போற்
பேசுகின்ற, ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன், வாழும்
இறை - வாழ்பவராகிய சிவபெருமான், தாழும் - தங்கும், (இடம்
ஆம்) கீழ் (உலகில்) கீழ் உலகில், சூழ் - சூழ்ந்த. அரசு -
அரசர்களும், இசைகொள் - புகழ்கொண்ட, மேல் உலகில் மேல்
உலகத்தில், வாழ் - வாழ்கின்ற, அரசு - அரசனாகிய இந்திரனும்;
வாழ - (காளியின் துன்புறுத்தலினின்று) வாழும் பொருட்டு (நடனம்
ஆடுதலில்) அரசனுக்கு சிவபெருமானுக்கு, ஆழிய - ஆழ்ந்த,
தோற்ற, சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம்
அணிந்தவளாகிய அக்காளி, செய - தன் குற்றம் நீங்கும்படி
வந்துபோற்ற, அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த
லோகங்களிலும், ஊழி - பல ஊழி காலமாக, வளர் - பெருகும்
காழிநகர்.
|