| 
         
          | 3525. | ஒழுகலரி தழிகலியி லுழியுலகு |   
          |  | பழிபெருகு 
            வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி
 குழுவினொடு கெழுவுசிவனைத்
 தொழுதுலகி 
            லிழுகுமல மழியும்வகை
 கழுவுமுரை கழுமலநகர்ப்
 பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
 வழிமொழிகண் மொழிதகையவே.       12
 |  
            12. 
        பொ-ரை: நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல்
 முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம்
 குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக
 இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம்
 பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை
 வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும்,
 எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய
 ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள்
 பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.
       கு-ரை: 
        அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில், உலகு உழி - உலகினிடத்தில், ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது
 அரியது (என்றும்) பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற
 வழியையும், நினையா - நினைந்து. முழுது உடலின் - உடல்
 முழுவதும், எழும் மயிர்கள் - முளைத்த உரோமங்களைக்கொண்ட,
 முனி - உரோமச முனிவர், குழுவினொடு - தமது கூட்டத்தொடு.
 (வந்து) கெழுவு - அங்கே தங்கிய. சிவனை - சிவபெருமானை!
 தொழுது - வணங்கி, உலகில் - உலக இச்சையில், இழுகும் -
 வழுக்கச் செய்கின்ற. மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும்
 விதம். கழுவும் - போக்கிய, உரை - வார்த்தையை (புகழை) யுடைய.
 கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின், பழுதில் இறை -
 வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும்,
 எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய தமிழ், விரகன்
 - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன். வழி
 மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள். மொழி
 தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம்.
 |