3515.
|
தாணுமிகு வாணிசைகொ
டாணுவியர் |
|
பேணுமது காணுமளவிற்
கோணுநுத னீணயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொண்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே.
2 |
2.
பொ-ரை: தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள்
கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட, நிலைபெற்ற
சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம்
கொண்டருளினார். வளைந்த நெற்றியையும், நீண்ட கண்களையு
முடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை
எடுத்தாள். மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும்,
வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும்
ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த
பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது,
வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு
அஞ்சி ஒளிந்து வாழ்ந்தால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு, தான்
நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து
காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும். சூரபதுமனுக்கு அஞ்சி
இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால்
போந்தபெயர் வேணுபுரம் என்பது.
கு-ரை:
ஆணு - (தன்) அன்பர்களாகிய தேவர்கள். வியர்
பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. காணும்
அளவில் - அறிந்ததும். தாணு - சிவபெருமான். மிகு - வலிமை
மிகுந்த. ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண
இசைந்து. (நிற்க - அதற்கேற்ப.) கோணுநுதல் - வளைந்த
நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய
அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி. பிடி - பெண்
யானையின் உருவை. மாணி - பெருமையையுடையவளாய்க் காண.
மது - மது என்ற அசுரனும். நாணும் வகை ஏணு - வெட்கும்படி
வலிமைகொண்ட. கரி - கயமுகாசுரன். பூண் - தான் மேற்கொண்ட
தீய தொழில்கள். அழிய - அழியும்படி. ஆண் - ஆண் தகையாகிய
விநாயகக் கடவுள். (கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய
தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர்) இயல் -
(அன்பர்க்கு அனுக்கிரகிக்கும்) அருளை, கொள் - கொள்வித்த.
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின். பதி - இடம்.
சேண் - வானுலகில் உள்ள, அமரர்கோன் - இந்திரன். வேணு
வினை - மூங்கிலை. ஏணி - ஏணியாகக்கொண்டு. காண்இல் - தான்
நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண -
ஒளிந்து காணும் பொருட்டு. நடு - நட்ட, வேணுபுரம் -
வேணுபுரமாம். ஆணு - அன்பு; ஆணுப் பைங்கிளி யாண்டுப்
பறந்ததே (சீவக சிந்தாமணி. 1002)
|