3516. பகலொளிசெய் நகமணியை முகைமலரை
       நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய்
     முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையிலறு முகவிறையை
      மிகவருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழவெழி றிகழநிக
     ழலர்பெருகு புகலிநகரே.            3

     3. பொ-ரை: சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற்
பிறந்த நாகரத்தினத்தையும், அரும்பு விரிந்த செந்தாமரையையும்
போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச்
சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய
திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான். அத்தகைய
பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர்
அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற
தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி
என்னும் திருத்தலமாகும். தேவர்கள் புகலடைந்தமையால் புகலி
எனப் பெயர் பெற்றது.

     கு-ரை: பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும்.
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். முகை
மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை (நாண்) மலரையும். நிகழ் -
போன்ற. சரண - திருவடிப் பேற்றுக்குரிய. அகவு - விருப்பும்
மிக்க. முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு, அகலம்மலி -
விஸ்தாரமாகிய, சகலகலை - கலைகளனைத்தையும். மிக - (தெளிவு)
மிகும்படி. உரை செய் - உபதேசித்தருளிய. முகம் உடைய -
திருவருள் நோக்கம் உடைய. பகவன் - சிவபெருமானின். இடம்
ஆகும். “அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி” “மணியடி”
என்னும் திருவடித் திருத்தாண்டகத்தாலும் முதலடியின் முற்பகுதி
தெளிவாம், முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான்
ஒருவர்க்கே உண்மையில் உள்ளது, ஏனைக் கடவுளர்க்கு
உபசாரமாத்திரையே. “முகந்தான் தாராவிடின் முடிவேன்
பொன்னம்பலத்தெம் முழுமுதலே”-என்னும் திருவாசகத்தில்
(கோயில் மூத்த திருப்பதிகம் 3) முகம் - என்னும் சொல் திருவருள்
நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க. பகை - தேவர்
பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. “பகை” பகைவருக்கு
ஆயினமையின் பண்பாகுபெயர். இறை - கடவுள். மிக -
அறச்செயல்கள் அதிகரிக்க. அருள - தர. அதனால். நிகரில்
இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள். புக -
சரண்புக, எழில் திகழ - அழகு விளங்க. நிகழ் - (இவற்றால்)
நேர்ந்த (புகலியெனும் பெயர்). அலர்பெருகு - அனைத்துலகினும்
மிக்குப் பெருகிய (புகலி நகர் என்க.)