3615. பண்டிரை பயப்புணரி யிற்கனக
       மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட
     முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
     மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவள முந்துகடல்
     வந்தமொழி வேதவனமே.               2

     2. பொ-ரை: முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய
பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி
என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த
ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், நிழல்தரும் சோலைகளில்
வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது
தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற
அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய
திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பண்டு - முற்காலத்தில். இரை - ஒலிக்கின்ற. பயம் -
பால். புணரியில் - அலைகளையுடைய பாற்கடலில். கனகமால்
வரையை - பொன்மயமான பெரிய மந்தர மலையை. நட்டு -
மத்தாக ஊன்றி. அரவினை - வாசுகி என்னும் பாம்பை.
கயிறிற்கொண்டு - கயிறாகக்கொண்டு. கடைய - தேவர்கள் கடைய.
வந்த விடம் - எழுந்த ஆலகாலவிடத்தை. உண்ட - உண்டருளிய.
குழகன்றன் இடமாம் - அழகனாகிய சிவபெருமானின் இடமாகும்.
வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற. நிழல் - நிழலையுடைய.
பொழிலில் - சோலையிலே.
 மாதவியின்மீது - மாதவி முதலிய
மரங்களின் மீது. அணவு - தாவிய. தென்றல் -காற்றின். வெறி ஆர்
- வாசனையுடையதும். வெண்திரைகள் - வெள்ளிய அலைகளால்
(செம்பவளம்) உந்து - வீசுகின்ற. கடல் வந்து -கடல் வந்து படியும்.
மொழி (ஆர்) - கீர்த்தியையுடையதும் ஆகிய. (வேதவனமே).