| 
         
          | 3618. | கத்திரிகை 
            துத்திரி கறங்குதுடி |   
          |  | தக்கையொ 
             டிடக்கைபடகம் எத்தணை யுலப்பில்கரு வித்திர
 ளலம்பவிமை யோர்கள்பரச
 ஒத்தற மிதித்துநட மிட்டவொரு
 வர்க்கிடம தென்பருலகில்
 மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண்
 மிடைந்துகளும் வேதவனமே.           5
 |  
             5. 
        பொ-ரை: கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள்
 துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய
 பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத்
 துள்ளிக்குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        கத்திரிகை துத்திரி இவ்வாத்தியங்களுடனே. கறங்கு துடி - ஒலிக்கும் உடுக்கையும். தக்கை - தக்கை என்னும்
 வாத்தியத்தோடு. இடக்கை படகம் என்னும் இவற்றோடு. உலப்பு இல்
 - அளவற்ற. எத்தனை கருவித்திரள் - எவ்வகைப்பட்ட இசைக்
 கருவிகளின் கூட்டங்கள். அலம்ப - ஆரவாரிக்க. இமையோர்கள் -
 தேவர்கள். பரச - துதிக்க. ஒத்து - தாள ஒத்துக்கிணங்க. அற -
 நன்றாக. மிதித்து - தாளையூன்றி. நடம் இட்ட - நடனமாடிய.
 ஒருவர்க்கு - சிவபெருமானுக்கு (இடம் அது என்பர்). மெய்த்தகைய
 - உண்மைத் தன்மையையுடைய. பக்தர்கள் - பத்தர்களும்.
 சித்தர்கள் - சித்து வல்லவர்களும். மிடைந்து - நெருங்கி. உகளும்
 - மகிழ்ச்சி மீக்கூரும். (வேதவனமே;) உகளுதல் - துள்ளிக் குதித்தல்;
 - அது மகிழ்ச்சிமீக்கூர நிகழ்வதாற் காரணம் காரியமாக
 உபசரிக்கப்பட்டது.
 |