3652. |
கல்லவட
மொந்தைகுழ றாளமலி |
|
கொக்கரைய
ரக்கரைமிசை
பல்லபட நாகம்விரி கோவணவ
ராளுநக ரென்பரயலே
நல்லமட மாதரர னாமமு
நவிற்றிய திருத்தமுழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல்கொ
டுத்தருளு கோகரணமே. 7 |
7.
பொ-ரை: ஓசைமிகுந்த கல்லவடம், மொந்தை, குழல்,
தாளம், வலம்புரிச்சங்கு ஆகிய வாத்தியங்களுக்கு ஏற்ப சிவ
பெருமான் நடனமாடுவார். அக்குப்பாசி அணிந்த இடுப்பில்,
நச்சுப்பற்களும், படமும் உடைய பாம்பை அணிந்து கோவண
ஆடை உடுத்தவர். அத்தகைய சிவபெருமான் ஆளும் நகர் நற்குண,
நற்செய்கை யுடையவர்களாகிய பெண்கள் சிவபெருமானது
திருப்பெயரைச் சொல்லித் தீர்த்தத்தில் முழுக, கொல்லும் விடநோய்
போன்ற வினைகளைத் தீர்த்து, காரியம் யாவினும் வெற்றி
கொடுத்தருளும் திருக்கோகரணமாகும்.
கு-ரை:
மலி - ஓசை மிகுந்த. கல்லவடம் மொந்தை குழல்
தாளம் கொக்கரையர் - கல்லவடம் முதலாகவுள்ள
இவ்வாத்தியங்களுக்கேற்ப நடிப்பவர். அக்கு அரைமிசை -
அக்குப்பாசி அணிந்த இடுப்பில், பல்லபடநாகம் விடப்பல்லையும்
படத்தையும் உடைய பாம்பை. விரி கோவணவர் - விரித்துப்
புனையும் கோவணமாக உடையவர் ஆகிய சிவபெருமான் ஆளும்
நகர் என்பர். அயலே - அருகில். நல்ல மடமாதர் - நற்குண
நற்செய்கையுடையவர்களாகிய பெண்கள். அரன் நாமம் - சிவபெருமானது திருப்பெயரை. நவிற்றிய
- சொல்லும். திருத்தமும்
முழுக - தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்ய. தீர்த்தத்தின் பெயர்
கூறியவாறு.
|