3664. ஆனவலி யிற்றசமு கன்றலைய
       ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில்
     வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக
     மாளிகை திகழ்ந்தமதிளோ
டானதிரு வுற்றுவள ரந்தணர்
     நிறைந்தவணி வீழிநகரே.              8

     8. பொ-ரை: தசமுகன் எனப்படும் இராவணன் தன்
வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க,
அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை
ஊன்றி, அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த
சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும்
சோலைகளும், செம்பொன் மாளிகைகளும், உயர்ந்த மதில்களும்
உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த
அழகிய திருவீழிநகராகும்.

     கு-ரை: ஆன - தனக்குள்ள. வலியின் - வலிமையைக்கருதி
மலையெடுத்ததனால். தசமுகன் - இராவணனது. தலை - தலைகள்.
அரங்க - அரைபட. அணி ஆழி விரலால் - மோதிரம் அணிந்த
விரலால். ஊன் அமர் - உடம்பில் உள்ள. உயர்ந்த - மிகுந்த.
குருதிப்புனலில் - இரத்த வெள்ளத்தில். வீழ்தர - வீழ்ந்துபுரள.
உணர்ந்த - நினைத்து மிதித்த. பரன் - சிவபெருமானது. ஊர் -
தலமாவது. தேன் அமர் - வண்டுகள் தங்கும். திருந்து - திருத்தமான. பொழில்கள் - சோலைகளும், செங்கனக மாளிகைகளும். திகழ்ந்த -
விளங்குகின்ற. மதிலோடு - மதிலுடனே. ஆன - (நிறைவு) ஆகிய.
திரு உற்று - செல்வம் பொருந்தி. வளர் - மேன்மேலும் பெருகுகின்ற
(வீழிநகர்) அந்தணர் நிறைந்த. அணி - அழகிய வீழிநகர். மதிள்
- ல, ள வொற்றுமை.