3745. மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை
       நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின
     ரொளிகிளர்
அத்தக வடிதொழ வருள்பெறு கண்ணொடு
     முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர்
     விளமரே.                           1

     1. பொ-ரை: சிவபெருமான், தலையில் அழகுற விளங்கும்
பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர். கரத்தில் விளங்கும்
நகங்களைப் போல தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும்
ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர். இத்தகைய
சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது யாம் உய்யும்பொருட்டு,
அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய
அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த
வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: மத்தகம் - தலையின்கண், அணிபெற - அழகுற,
மலர்வது ஓர்மதி - விளங்கிக்கொண்டிருக்கும் பிறையை. புரை -
ஒத்த.நுதல் - நெற்றி. இறைவர் நெற்றிக்கு வேறு பிறை ஒப்பாகாது
அவர் அணிந்த பிறையே உவமையாயிற்று. சேக்கிழார் பெருமான்
விரைந்து மலையேறும் கண்ணப்ப நாயனார் செலவுக்கு உவமமாக
வேறு கூறாது அந்நாயனார் மனவேகத்தையே உவமை கூறியதும்
காண்க: “பூத நாயகன் பால் வைத்த, மனத்தினுங் கடிது வந்து
மருந்துகள் பிழிந்து வார்த்தார்”. (தி.12 கண்ணப். புரா. 176) கரம் -
திருக்கரத்தில். ஒத்து - ஏற்ற தாகி. அகம் (கண்டவர்) மனம். நக -
மகிழ. மணிமிளிர்வதோர் அரவினர் - இரத்தினம் பிரகாசிக்கின்ற
பாம்பைக் கங்கணமாக உடையவர்.