3919. ஆசடை வானவர் தானவரோ
       டடியா ரமர்ந்தேத்த
மாசடை யாதவெண்ணீறுபூசி
     மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங்
     கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப்
     பரிதிந் நியமமே.                     8

     8. பொ-ரை: அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாக விளங்கும்
சிவபெருமான் தேவர்களும், வித்தியாதரர்களும் உடன் திகழ,
அடியவர்கள் அமர்ந்து ஏத்தி வழிபடப்படுபவர். அவர், பாவத்தை
அடைவியாது நீக்க வல்ல திருவெண்ணீற்றினைப் பூசி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்றுத் திரிபவர். அவர் மணிகள் பதிக்கப்பெற்ற
மேகலை நழுவி விழுமாறு என்னை மெலியச்செய்து, என் உள்ளம்
கவர்ந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பசுமையான
இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய
திருப்பரிதிநியமம் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஆசு - பற்றுக் கோடாக. அடை - அடையும். வானவர் தானவரோடு அடியார். மாசு அடையாத - பாவத்தை அடைவியாது
நீக்க வல்ல என்பது “பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு”
என்னும் திருநீற்றுப் பதிகத்தாலும் அறிக. காசு - மணிகள். அடை -
பதிக்கப்பெற்ற. மேகலை “பல் காசு நிறைத்த சில்காழல்குல்” என்பது
திருமுருகாற்றுப்படை. பாசடைத்தாமரை - பசிய இலைகளையுடைய
தாமரை.