3942. |
ஏடிய
னான்முகன் சீர்நெடுமா |
|
லெனநின்
றவர்காணார்
கூடிய கூரெரி யாய்நிமிர்ந்த
குழக ருலகேத்த
வாடிய வெண்டலை கையிலேந்தி
வலஞ்சுழி மேயவெம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யுஞ்
சரிதை பலபலவே. 9 |
9.
பொ-ரை: இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய்
ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் உலகோர் போற்றி
வணங்குமாறு, வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். எம் தலைவரான
அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப்
போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவிளையாடல்கள் பலபல
வாகும்.
கு-ரை:
ஏடு இயல் நான்முகன் - இதழ்களை உடைய தாமரை
மலரில் தங்கும் பிரமன். ஏடு - பூவிதழ். அது மலருக்கு ஆனது
சினை ஆகு பெயர். பொதுப்பெயர், சிறப்புப்பெயர்க்கு வரும்
முறையால் தாமரை மலருக்காயிற்று. காணார் - காணாதவர்களாக,
எரியாய் நிமிர்ந்த குழகர். வாடிய வெண் தலை - உலர்ந்த
தலையோடு, பிச்சைப் பாத்திரம். சரிதை - திருவிளையாடல்கள்.
காணார் - முற்றெச்சம்.
|