3949. |
வானமர்
தீவளி நீர்நிலனாய் |
|
வழங்கும்
பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற
முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான்
றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா
கொடுவல் வினைதானே. 5 |
5.
பொ-ரை: ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய
ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய
தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும்
குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப்
பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக்
கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற
என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக்
கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா.
கு-ரை:
வான் ஆகாயமும். அமர் - அதன்கண் அடங்கும்,
தீவளி முதலியவையுமாகிய பஞ்சபூத சம்பந்தமாய்த் திரிகின்ற.
பழியாகும் ஊன் - பழிக்கு இடமாகிய உடம்பில். அமர் - தங்குகிற.
இன் உயிர் - இனிய உயிர். தீங்கு -தீமைதருவதாகிய. குற்றம் உறைவு
ஆல் - பாவத்திற்கு இடமாயிருத்தலினால். பிறிது இன்றி - (அதின்
நீங்கி, நன்மைபெறும் வழி) வேறொன்றும் இன்மையால். நான் -
அடியேன். அமரும் - விரும்பி அடையும். பொருள் ஆகி நின்றான்
- பற்றுக்கோடாகிய பொருளாகி நின்றவன். (திருநாரையூரெந்தை).
கோன் - அவனே தலைவன். அவனைக் குறுக - அவனைச் சரணம்
அடைந்தால். வல்வினை - முற்கூறிய தீமைகளும், அவற்றின்
காரணமாகிய பாவமும், அவற்றிற்கு ஏதுவாகிய வலிய
கன்மமலங்களும். குறுகா - நம்மைவந்தடையமாட்டா.
|