4097. |
நாவணங்
கியல்பா மஞ்செழுத் தோதி |
|
நல்லராய்
நல்லியல் பாகும்
கோவணம் பூதி சாதனங் கண்டாற்
றொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பா மிராவணன் றிண்டோ
ளிருபது நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. 8 |
8.
பொ-ரை: நாவிற்கு அழகு செய்யும் இயல்பினதாகிய
திருவைந்தெழுத்தை ஓதி, நல்லவராய், நல்லியல்புகளை அளிக்கும்
கோவணம், விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள்
அணிந்தவர்களைக் கண்டால் வணங்கி மகிழ்பவர் குலச்சிறை
நாயனார். அவர் வழிபாடு செய்கின்ற, பகைவரது அம்புகள் பணிந்து
அப்பாற் செல்லும் பெருவலிமை படைத்த இராவணனின் இருபது
தோள்களும் நெரியுமாறு தம் திருப்பாதவிரலை ஊன்றிப் பின்
அவனைச் சிவபக்தனாகும்படி செய்தருளிய சடைமுடியுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம்
இதுவே.
கு-ரை:
நா - அணங்கு இயல்பாம் ஐந்தெழுத்து ஓதி:-
அணங்கு - நாவினுக்கருங்கலம் நமச்சிவாயவே (தி.4.ப.11.பா.2.)
என்ற கருத்து.
|