2801. |
ஆடி னாய்நறு
நெய்யொடு பால்தயிர் |
|
அந்த
ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்
சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. 1 |
1.
பொ-ரை: நறுமணம் உடைய நெய்யும், பாலும், தயிரும்
ஆட்டப்பெற்றவனே! தில்லைவாழந்தணர் எல்லோரும் எப்பொழுதும்
அகத்தும் புறத்தும் பிரியாது வழிபடும் திருச்சிற்றம்பலத்தைத்
திருக்கூத்தாடும் ஞான வெளியாகக் கொண்டு வாழ்பவனே!
நறியகொன்றைப் பூமாலையை நயந்து (விரும்பிச்) சூடியவனே!
நான்மறையுள் சாமகானத்துடன் பல கீதங்களையும் பாடியவனே!
பலவாகிய சடைமேல், குளிர்பனியைச் சொரிகின்ற
வெண்ணிலவையுடைய இளம் பிறையைச் சூடியவனே! எம்
தொல்லை வினை இல்லையாம்படி திருவருள் செய்க.
கு-ரை:
எல்லாத் தலங்களுள்ளும் ஓர் ஆண்டிற்குள் ஆறு
நாள் அபிடேக விசேடமுடைய தம் சிதம்பரமேயாதலின் ஆடினாய்
என்பது திருநடனத்தையும் கருதிய தொடக்கம் உடையதாகி நின்றது.
தில்லைவாழ் அந்தணருள் நடராசப்பிரானாரும் ஒருவராதலின்,
பிரியாமை பிரியாதுள்ளது. சிற்றம்பலம் - ஞானாகாசம்,
பூதாகாசத்தைப் பிரித்தல் ஒல்லும், கடத்தற்குரிய தத்துவங்களுள்
ஒன்று அது, ஞானாகாசத்தைப் பிரிதல் என்றும் எவ்வுயிர்க்கும்
இல்லை. நாடுதல் - சங்கற்பம். நயத்தல் - விரும்புதல். மறை -
சாமவேதம், பிறவும் கொள்ளப்படும். கீதம் - இசைப்பாடல். திங்கள்
சூடிய கருணைத்திறம், தொல்வினைச் சுருக்கம் வேண்டுங்கால்
குறித்தற் பாலது, பல்சடை எனப்பன்மையும், புன்சடை
எனக்குறுமையும், நீள்சடை என நெடுமையும் பொன்சடை என
நிறமும், விரிசடை எனப் பரப்பும், நிமிர்சடை என உயர்ச்சியும்
பிறவும் திருமுறையுட் காணப்படும். பொன் சடையைப் புன்சடை
எனலும் உண்டு.
அந்தணர்தம்
சிந்தையானை (தி.6ப.1பா.1) அரியானை
என்று எடுத்தே அடியவருக்கு
எளியானை, அவர் தம் சிந்தை
பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்பாடிப் பிறங்குசோதி
விரியாநின்று எவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற்பின்னும் போற்றல்
செய்வார் (பெரியபுராணம் திருநாவு. பா-175) என்பவற்றால்
சிந்தையும் சிவபிரானும் பிரியா வினைக்கு முதலாதல் விளங்கும்.
நின்று
சபையில் ஆனந்த நிர்த்தமிடுவோர்க்கு ஆளாயின்
வென்ற பொறியார்க்கு ஆனந்த வெள்ளம் பெருக வுய்ப்பர்
(பேரூர்ப் புராணம்.
நாவலன் வழிபடு படலம். பா -23) என்னும்
உண்மையைத் தெளிவிக்க ஆடினாய் என்றெடுத்தார். ஆடினாய்
நறுநெய்யொடு பால் பாதமலர் சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை
என்னுந் திருவாசத்தில் (பா.35) பாதமலர் என்னும் தொடர்
இயைவதுபோல மீளவும் நெய், பால், தயிர் ஆடினாய் என்று
இயைவது உணர்க.
சிவ வழிபாட்டிற்கு,
கூறப்படும் உபசாரங்கள் பலவற்றினும்,
அபிடேகமே சிறந்தது ஆதலின், அதனை எடுத்துக் கூறினார்.
அதனை, சிவதருமம் பல. அவற்றுட் சிறந்தது பூசனை. அதனுள்,
அவமில் பல உபசாரத்தைந்து சிறந்தன. ஆங்கவை தாம்
அபிடேகம் அரிய விரை, விளக்கு, மனுத்தாங்கும் அருச்சனை,
நிவேதனம் ஆகும் என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக.
(பேரூர்ப் புராணம் மருதவரைப் படலம். 29) தேன், நெய், பால்,
தயிர் ஆட்டுகந்தானே முதலியவற்றையும் நோக்குக.
அந்தணர்-தில்லைவாழந்தணர். எவ்வுயிர்க்கும் கருணைக்
கடலென்பார், வேதியர் மறையோர் என்னாது அந்தணர் என்று
அருளினார். மெய்ஞ்ஞானிகள், அவனருளே கண்ணாகக் கண்டு
திளைக்க, ஆனந்தக்கூத்தாடும் பரஞானவெளி ஆதலின், ஊன்
அடைந்த உடம்பின் பிறவி, தான் அடைந்த உறுதியைச்சார, ஆதியும்
நடுவும் முடிவும் இல்லாத அற்புதத் தனிக் கூத்தாடும் இடம்
சிதம்பரம், ஞானாகாசம் எனப்பெற்றது. சிற்பரவியோமம் ஆகும்
திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடஞ் செய்கின்ற பூங்கழல்
போற்றி போற்றி என்றருளிய சேக்கிழார் திருவாக்கினாலும் (பெரிய
புராணம் தில்லைவாழ் அந்தணர் பா.2) உணர்க.
நறும்-நறுமணம்
உள்ள, கொன்றை-மந்திரங்களிற் சிறந்ததாகிய
பிரணவ மந்திரத்துக்குரிய தெய்வம், தாமே எனத்தெளியச் செய்ய,
கொன்றைமாலையணிந்தனர். அம்மலர், உருவிலும் பிரணவ
வடிவாயிருத்தலின் பிரணவபுட்பம் எனப்படும். துன்றுவார் பொழில்
தோணிபுரவர்தம், கொன்றைசூடும் குறிப்பது வாகுமே (தி.5ப.45பா.7)
என்னும் திருக்குறுந்தொகையாலும் ஓரெழுத்திற்குரிய பொருள்
உயர்நெடு மாலயன் என்பார் நீரெழுத்து நிகர் மொழி நின்னில
விதழிமுன் என்னாம் என்னும் வாட்போக்கிக் கலம்பகப் பாட்டாலும்
அறிக. பனிகால் கதிர் - குளிர்ச்சியை வீசும் ஒளியையுடைய, வெண்
திங்கள் சூடினாய் என்றது, உற்றார் இலாதார்க் குறுதுணையாவன
சிவபிரான் திருவடியே என்பதைக் குறிக்கும். தொல்வினை என்றது
சஞ்சித கருமத்தை. பல்சடை - பூணூல் அபரஞானத்தையும், சடை
பரஞானத்தையும் குறிக்கும் என்ப. அதனாலும், சிவசின்னங்களில்
சடையே சிறந்ததாயிருத்தல் புகழ்ச் சோழ நாயனார் வரலாற்றாலும்,
விடந்தீர்க்க வேண்டித் திருமருகற் பெருமானை இரத்தற்கண் சடை
யாய் எனுமால் என்றெடுத் தருளினமையானும் அறியப்படும்.
|