2806. ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல்
       அங்கை யாய்அம ரர்க்கம ராவுமை
பாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்கா
மாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
     மன்னி னாய்மழு வாளி னாய்அழல்
நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண்
                             ணாவினையே. 6                                         

     6. பொ-ரை: திருமேனியில் தோய்த்த அழகிய கொன்றை
மாலையையுடையவனே! தீ ஏந்திய திருக்கையனே! தேவதேவனே!
அம்பிகைபாகமுடைய பகவனே! பலி ஏற்றுத்திரியும் பாண்டரங்கக்
கூத்தனே! வானளாவிய சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தே
நிலைபெற்றவனே! மழுவாளை ஏந்தியவனே! நச்சுத் தீயையுடைய
அரவக்கச்சணிந்த திருவரையினனே! உன் அடியவரை வினைகள்
அடையா. (ஆதலின், உனக்கு அடிமை பூண்ட எமக்கும் வினை
இல்லை என்றவாறு.)

     கு-ரை: ஆகம் - மார்பில், தோய் அணிகொன்றையாய் -
தோயும் அழகிய கொன்றை மாலையையுடையவனே! அனல்
அங்கையாய் - உள்ளங்கையில் அனல் ஏந்தியவனே! அமரர்க்கு
அமரா - தேவதேவனே! (அமரர் - தேவர்; மரணம் இல்லாதவர்.)
பகவா - பகவனே! ஐசுவரியம், வீரியம், ஞானம், புகழ், திரு,
வைராக்கியம், என்னும் இவ்வாறு குணங்களையும் உடையவன்
பகவன். அது சிவபெருமானையன்றி, மற்றெவரையுங் குறிக்காது.
மாகம்தோய் - ஆகாயத்தை அளாவிய. பொழில் - சோலை, மல்கு -
வளம் நிறைந்த, அழல் நாகம் - விடத்தையுடைய பாம்பு. தோய் -
சுற்றிய, அரையாய் - இடுப்பையுடையவனே! (அரை - அளவையாகு
பெயர்) உன்      அடியவரை வினை நண்ணாதனவாகும்.