2807. சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய
       சங்க வார்குழை யாய்திக ழப்படும்
வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்
ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம்
     அங்கை யால்தொழ வல்லடி யார்களை
வாதி யாதகலும்நலி யாமலி தீவினையே.         7

         7. பொ-ரை: நல்ல இனத்துப் பொருந்திய பளிங்கொடு
வெண் சங்குகொண்டு செய்யப்பட்ட குண்டலத்தை உடையானே,
விளங்குகின்ற மறையோனே, விகிர்தனே, திருவிழாக்கள் நிறைந்த
அழகிய தில்லையுள் முதல்வனாகிய நினக்கு இடமான
திருச்சிற்றம்பலத்தை அழகிய கைகளால் தொழவல்ல அடியார்களைத்
தீவினைப் பெருக்கம் வாதிக்காது; வருத்தா தொழியும்.

     கு-ரை: சாதியார் பளிங்கின் ஓடு - உயர்ந்த சாதிப்பளிங்கு
போலும், வார் - தொங்கும், சங்கக்குழையாய் - சங்கினாலாகிய
காதணியையுடையவனே. இன் - சாரியை, ஓடு ஒப்புப் பொருளில்
வந்தது. “ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்” என்புழிப்போல.
திகழப்படும் வேதியா-வேதங்களில் விளங்க எடுத்துப்பேசப்படுபவனே. விகிர்தா - மாறானவனே. அம்கையால் - அழகிய கைகளால். “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே... வழிபடும் அதனாலே”
(தி.2ப.106பா.1) யென்றபடி சிவபெருமானைக் கும்பிட “எத்தனைகோடி
யுகமோ தவம் செய்திருக்கின்றன” என்று பாராட்டற்குரிய தன்மை
பற்றிக் ‘கைகளால் தொழ’ - என வேண்டாது கூறினார், வணங்கத்
தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்த வைத்து என்பது போலக்
கைபெற்றதன் பயன் அவனைக் கும்பிடற்கே யெனல்
தோற்றுவித்தற்கு.அதனை, “கரம் தரும் பயன்இது என
உணர்ந்து...பெருகியதன்றே” என்னும் (திருக் குறிப்புத் தொண்ட
நாயனார் புராணம் 61) சேக்கிழார் பெருமான் திருவாக்கானும்
உணர்க. மலி - மிக்க. நலியா - துன்புறுத்தாதன ஆகி, வாதியாது -
எதிரிட்டு நில்லாமல், அகலும் - நீங்கும். “வாதியா வினை
மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே”(தி.2ப.106பா.11)
என்ற இடத்தும் (வாதியாது - பாதியாது) இப்பொருளில் வருதல்
காண்க. வல்ல - குறிப்புப் பெயரெச்சத்தின் ஈறு தொக்கது.