2814. |
பைய
ராவரும் அல்குன் மெல்லியல் |
|
பஞ்சின்
நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த்
தேற லூறலிற் சேறுல ராதநற்
பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.
3 |
3.
பொ-ரை: பாம்பின் படம் போன்ற அல்குலையும், பஞ்சு
போன்ற மென்மையான அடியையும், வஞ்சிக்கொடி போன்ற
நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி
எழுந்தருளியுள்ள இடம், செங்கழுநீர்ப் பூக்கள், தாமரைப் பூக்கள்
இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத
வயல்களையும், பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும்
சிறப்பையுமுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக!
கு-ரை:
பைஅராவரும், வஞ்சிகொள் நுண்ணிடை-என்னும்
தொடர்களிலுள்ள பைஅரா-படத்தையுடைய பாம்பு, வரும்
கொள்-என்ற சொற்கள் உவம வாசகம், பஞ்சின் ஏர்அடி-பஞ்சைப்
போன்ற மெத்தென்ற அழகிய அடி, இன் என்ற உருபு உவமப்
பொருளில் வந்ததனால், பஞ்சின் நேர்அடி எனப் பிரிக்கலாகாமை
யறிக, இன்தவிர் வழிவந்த சாரியையெனக் கொள்ளின் பஞ்சு(இன்)
நேரடி எனப்பிரித்துப் பஞ்சையொத்த அடியெனக் கொள்ளலாம்.
கழுநீர்-செங்கழுநீர், தேறல்-தேன், மலர்த்தேன் ஊறிப் பாய்ந்து
கொண்டேயிருப்பதால் வயலிற் சேறுலராத நல்ல வளம்பொருந்திய
பூந்தராய் என்றும் பொய்யிலா மறையோர்பயில் பூந்தராய் என்றும்
இயைக்க.
|