2815. முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
       அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்
     மேவி னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே. 4

     4. பொ-ரை: தாமரைமொட்டு, கோங்கின் அரும்பு, ஊறும்
தேனை உள்ளே கொண்ட இளநீர், மூவாமருந்தாகிய அமிர்தத்தை
உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திரு
முலைகளையுடைய உமாதேவியாரை, திருநீறு பூசப் பெற்றமையால்
வெள்ளிமலைபோல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம், பறவைகள்
அமைதியாய்த் துயில்கின்ற, மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய
சோலைகளையுடைய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக!

     கு-ரை: முள்ளி-தாமரை, தாமரைத்தண்டிலுள்ள கேசரங்கள்
முள்ளைப்போலக் காணப்படுவதால் முள்ளியெனப்பட்டது.
(முளரி-தாமரை) காரணப்பெயர். (காரண இடுகுறிப்பெயரென்க).
முகை-காயரும்பு. மொட்டு-முற்றிய அரும்பு. மொட்டு இயல் கோங்கு- மொட்டாகப் பொருந்திய கோங்கு. கோங்கமொட்டு. அரும்பு
தேன்கொள் குரும்பை-ஊறும் தேனைக்கொண்ட குரும்பை இல்
பொருளுவமை. அரும்புதல்-இங்கு ஊறுதல் என்னும் பொருட்டு.
இச்சொல் “கவர்வரும்ப” எனப் பிறபொருளில் வருதலும் காண்க.
மூவாமருந்து-மூவாமைக்குக் காரணமான மருந்து. எதிர்மறைப்
பெயரெச்சம்-ஏதுப்பொருள் கொண்டது. வீமருபொழில்-மலர்கள்
பொருந்திய சோலைகளில். புள்ளினம் துயில் மல்கிய-பறவைக்
கூட்டங்கள் துயிலுதல் மிகுந்த (பூந்தராய்). தங்களுக்கு வேண்டிய
உணவு முதலிய வகைகளெல்லாம் எளிதிற் கிடைத்தலால் கவலை
யின்றித் துயிலுகின்றன. இதனால் தலத்தின் சிறப்புக் கூறியவாறு.
தாமரையரும்பு, கோங்குமொட்டு, தேனூறுகுரும்பை, அமிர்தம்உள்
இயன்ற செம்பொற் கலசம்போன்ற தனபாரம் என்பது பல்பொருள்
உவமை (தண்டியலங்காரம் 32-16).