| 
       
         
          | 2816. | பண்ணி 
            யன்றெழு மென்மொழி யாள்பகர் |   
          |  | கோதை 
            யேர்திகழ் பைந்தளிர் மேனியோர் பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம்
 பெய்வளையார்
 கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு
 நீல மல்கிய காமரு வாவிநற்
 புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே. 5
 |       5. 
        பொ-ரை: பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழியாளாய், நிறைந்த கூந்தலையும், பசுந்தளிர் போன்ற
 மேனியையுமுடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு
 பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும்
 இடம், வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற
 நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும், பசு
 புண்ணியங்கள், பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற
 பதியுமாகிய திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
 வணங்குவோமாக!
       கு-ரை: 
        பண்ணியன்று எழும்-பண்ணின் இசையொடு பொருந்தி வெளிப்படும், மென்மொழியாள்-மெல்லிய மொழியை உடையவள்.
 பெண்டிர் மென்மொழியர் என்பதனை மென்மொழிமே வல ரின்னரம்
 புளர என்னும் திருமுருகாற்றுப்படையாலும் அறிக.
 பகர்-ஞானப்பூங்கோதையாள் 
        என்று சிறப்பித்துச் சொல்லப்
 படுகின்ற, கோதை-கூந்தலையும், ஏர்திகழ்-அழகு விளங்குகின்ற.
 பைந்தளிர் மேனி-பசிய தளிர் போன்ற மேனியையுடையவளுமாகிய
 உமாதேவியார், இயன்ற-கூடிய. மொய்ம்பின் தோளையுடைய,
 இன்சாரியை. காவி, செழும் கருநீலம் செங்கழுநீரோடு கூடிய செழிய
 கரிய நீலோற்பலமலர், காவியிருங் கருங்குவளை (தி.1 ப.129 பா.1)
 என்றதும் காண்க. மல்கிய-மிகுந்த. காமரு-அழகிய. (காமம்மருவு)
 மரூஉ காமம்-வரு, என்ற தொடரின் மரூஉ எனக்கொண்டு
 விரும்பத்தக்க எனப் பொருள்கூறலும் ஆம்.
 |