2821. கலவ மாமயி லார்இய லாள்கரும்
       பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
     ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே. 10

     பொ-ரை: தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க்,
கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும்,
கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும், வாசனை
பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமா
தேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான். கூறத்தகாத
சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும், சமணர்களையும்
பிறக்கும்படி செய்தவன் அவனே. அப்பெருமானை மனம், வாக்கு,
காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான்.
அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள்
போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய். அத்திருத்தலத்தை நாம்
வணங்குவோமாக.

     கு-ரை: கலவம்-தோகை. மயில்ஆர்-மயில்போன்ற. இயலாள்-
சாயலையுடையவள். குலவு பூங்குழலாள் உமை-
பூங்குழலையுடையவளாகிய குலாவும் உமை. கூறனை-உமாதேவியாரை
ஒருபங்கு உடைய சிவபெருமானை, வேறு உரையால்-மாறுபட்ட
சொற்களால். அலவை-தகாத சொற்கள். தேரமண்-தேரர்
அமணர்களாகிய (மரூஉ) ஆதர்-பயனற்றவர்கள். அலவை ... ஆக்கினான்-புத்தரும் சமணரும் ஆகிய பயனிலிகளை, அலவை
சொல்லுவாராக ஆக்கினவன். முன்வினைப் பயனாற் புறமதத்திற்
பிறந்து அதன் பயனாகச் சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும்
தீவினைக்கே முயல்கின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வது
கன்மவசத்தினால் ஆவதெனினும் அதுவும் சிவன் செயலே
என்றுணர்த்துவார், ‘ஆக்கினான்’ என இறைவன் மேல்
வைத்தோதினார். ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் ... பூந்த
ராய்-தன்னையடைந்த அளவில் சிவப்பேற்றை யளிக்கவல்ல
(பெருமை வாய்ந்த) பூந்தராய் எனத் தலத்தின் பெருமை கூறினார்.
கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களால் நிட்டை கூடுதலுறுவார் எய்தும்
பேற்றை அளிக்கவல்லது இத்தலம் என்க.