2823. |
இயலிசை
எனும்பொரு ளின்திறமாம் |
|
புயல்அன
மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உல கடிதொழ அமர்ந்தவனே
கலன்ஆவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலன்நாள்தொறும் இன்புற நிறைமதி
அருளினனே.
1 |
1. பொ-ரை:
இயற்றமிழ், இசைச்தமிழ், நாடகத்தமிழ் இவற்றில்
கூறப்படும் பொருளின் பயனாக விளங்குகின்ற, கார்மேகம் போன்ற
கருநிறக் கண்டத்தையுடைய புண்ணிய மூர்த்தியே! கயல்மீன் போன்ற
நீண்ட கண்களையுடைய உமாதேவியோடு எல்லா உலகங்களும்
தொழும்படி வீற்றிருப்பவனே! உனக்கு அணிகலனாக அல்லது
உண்கலனாக விளங்குவது மண்டையோடே ஆகும். நல்ல
மணமுடைய பூஞ்சோலைகள் நிறைந்த திருப்புகலியில் வீற்றிருந்து
இந்நிலவுலகத்தோர் நாடோறும் இன்புறும்படி நிறைந்த அபர ஞான,
பர ஞானங்களை அடியேனுக்கு நீ அருளிச் செய்தாய்.
கு-ரை:
இயல் இசை எனும் பொருளின் திறமாம் புண்ணியனே
-இயற்றமிழ் இசைத்தமிழ் (நாடகத்தமிழ்) என்னும் இவற்றில் கூறும்
பொருளின் பயனாகிய புண்ணிய மூர்த்தியே. புயல் அனமிடறு
உடைப் புண்ணியனே-முகில்போன்ற கரிய கழுத்தை உடைய
புண்ணிய மூர்த்தியே. கலன் ஆவது வெண்டலை-உமக்கு
அணிகலமாவது நகுவெள்தலையாம். அத்தகைய அடிகளீரே! நிலன்
நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே-நில உலகத்தில்
உள்ளார் நாடோறும் இன்பமடையும்படி
நிறைந்த அபரஞான
பரஞானங்களை அடியேனுக்கு அருளிச் செய்தவராவீர். இயல் இசை
எனவே உபலக்கணத்தால் நாடகத் தமிழும் கொள்ளப் படும். கற்றல்
கேட்டல் உடையார் என்புழிப்போல முத்தமிழ் நூல்களை யறிவதின்
பயன்-சிவனே பதியென்றுணர்ந்து வீடுபேறு எய்தலாம். அல்லாத வழி
அந்நூல்களை யறிவதாற் பயன் இல்லை யென்பது கருத்து. இதனை
மந்திபோல் திரிந்து ஆரியத் தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர் எனப் பிறிதோரிடத்து அருளிச் செய்தலையும் காண்க.
கலனாவது வெள்தலை யென்பதற்கு உண் கலமாவது பிரமகபாலம்
என உரைக்கினும் அமையும். அமர்ந்தவனே விளி. அமர்ந்தவனே
நிறைமதியருளினனே- அமர்ந்தவராகிய நீரே எனக்கு
நிறைமதியருளினீராவீர். இடவழுவமைதி; இவ்வாறு கூறுவதே
பின்வரும் பாசுரங்களுக்கு ஒப்பக் கூறுவதாகும். திருஞானசம்பந்தர்
பெற்ற ஞானம் உலகம் இன்புறற் பயனை விளைத்தது. மதி-இங்கு
அறிவின்மேல் நின்றது. இனி, அமர்ந்தவனே, நிறைமதி யருளினவனே
என்பதற்கு அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி
யருளினவனுமாவான் என்றுரைத்தலுமொன்று.
|