2827. கருமையின் ஒளிர்கடல் நஞ்சம்உண்ட
  உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே 
     அரவேரிடை யாளொடும் அலைகடன் மலிபுகலிப்
     பொருள்சேர்தர நாள்தொறும் புவிமிசைப்                             பொலிந்தவனே. 5

     5. பொ-ரை: பாற்கடலில் தோன்றிய கருநிற நஞ்சை உண்டு,
உன் முழுமுதற் பண்பினை விளங்குமாறு செய்து உலகுயிர்களைப்
பாதுகாத்தருளிய உன்னுடைய பெருமையை மண்ணுலகத்தோர் போற்றலாமே தவிர, மற்ற எவ்வித அளவைகளாலும் ஆராய்வதற்கு
அரியவனாய் உள்ளவனே! அரவம் அன்ன இடையுடைய
உமாதேவியோடு, அலைகளையுடைய கடல்வளம் பொருந்திய
திருப்புகலியிலே, இப்பூவுலகில் நாள்தோறும் அறம், பொருள்,
இன்பம்,வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி நீ
வீற்றிருந்தருளுகின்றாய்.

     கு-ரை: கருமையின் ஒளிர் கடல் நஞ்சும்-கருமையினால்
ஒளிர்கின்ற நஞ்சும், கடலில் உண்டாகிய நஞ்சும். நஞ்சம் உண்ட
உரிமையின் உலகுக்கு உயிர் அளித்து நின்றனன். பெருமை ...
ஆயவனே-நிலத்தவர், பூமியிலுள்ளவர்கள் உன் பெருமையைப்
பருப்பொருட்டாக ஒருவாறு பேசினாற் பேசலாமே தவிர,
அருமையான எவ்வித ஆராய்ச்சித் திறத்தினாலும்
அளந்தறியப்படாதவனே. அருமையில்-சிறப்புஉம்மை விகாரத்தால்
தொக்கது. அரவு ஏர் இடையாள்-பாம்புபோன்ற இடையையுடைய
உமாதேவியார். கடல்மலிபுகலி-கடல்வளம் நாடோறும் மிகுந்த
திருப்புகலியின் கண். புவிமிசைப் பொருள் சேர்தரப்
பொலிந்தவனே-இப் பூமியின் கண் நாள்தோறும் அறம்பொருள்
இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களும் சேரும்படி
பொலிந்தவனே.