2841.      பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
       சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
     ஏருடை மணிமுடி யிராவணனை
       ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 8

    8. பொ-ரை: அழகிய மணிமுடியணிந்த இராவணன்
பொறுத்தற்கரிய துன்பமடையம்படி கயிலை மலையின்கீழ்
அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே! தீவினையால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும்
வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல்
வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட
என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத்
தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான
பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு
அழகாகுமா?

     கு-ரை: இராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே-
பொறுத்தற்கரிய துன்பமுறும்படி கைலை மலையின்கீழ் அடர்த்தருளியவரே. ஆரிடர் - அருமை + இடர்.