2842.      உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
       ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
     கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
     அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 9

     9. பொ-ரை: திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே! திருவாவடுதுறையில்
எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நான் உண்ணும் நிலையிலும்,
பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும்
ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா
வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்
முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும்
வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது
உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: உண்ணினும் பசிப்பினும் நின்மலர் அடி அலால்
உரையாது என்நா- “நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன்”
என்பதனை நினைவுறுத்துகிறது.