2843.      பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
       அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
     புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
     பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. 10

     10. பொ-ரை: புத்தரும், சமணரும் புறங்கூறினாலும்
பொருட்படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு
அருள்புரிகின்றவனே! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும்,
தலைவா! உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா
வேறேதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை
இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற
வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில்
அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா?

     கு-ரை: பித்து - பித்தம். புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே - இவ்வடிகளில் வரும்
உரைக்க என்னும் செய என் எச்சம், காரண, காரிய, உடனிகழ்ச்சி
யல்லாத பொருளின் கண்வந்தது "வாவி தொறும் செங்கமலம்
முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள் காட்ட" என்புழிப்போல.