2846. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
  வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
     ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
     மூலம் ஆய முதலவன் தானே.           2

     2. பொ-ரை: பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத்
தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத்
தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள்
சிந்திக்கும் நன்னெறியாகும். ஏனென்றால் அனைத்திற்கும் மூலப்
பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான்.

     கு-ரை: புள்ளினம் புகழ்போற்றிய பூந்தராய் - அடியார்கள்
பூந்தராயைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டலைக் கேட்டிருந்த கிளி,
பூவை முதலிய பறவையினங்களும் புகழைப் போற்றுவன ஆயின.
"தெள்ளுவாய்மைத் திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன
பூவையே"