2847. வேந்த ராய்உல காள விருப்புறின்
  பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
     நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச்
     சாதி யாவினை யான தானே.           3

     3. பொ-ரை: நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால்
திருப்பூந்தராய் என்னும் தலத்தில எழுந்தருளியுள்ள சிவபெருமானின்
பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள். மேலும் அத்திருவடிகளை
விதிமுறைப்படி நினைத்து, போற்றித் தியானித்தால் வினைகள் தம்
தொழிலைச் செய்யா. எனவே பிறவி நீங்கு்ம். வீடுபேறு உண்டாகும்.

     கு-ரை: மாந்தரீர் நீங்கள் அரசராகி உலகை ஆளவிரும்பினால்
அதனைப் பூந்தராய் நகர் மேவியவன் பொன்னார் திருவடியே தரும்.
பின்னும் அத்திருவடியை ஆசான் உணர்த்திய முறைப்படி நினைந்து
துதிப்பின் நிட்டை கூட வினையாயினவை தம் தொழிலைச்செய்யா.
ஆகவே பிறவியறும்: வீடு பேறு உண்டாம்: என்பதே வைப்பு
அடிகளின் பொருள். நினைந்தேத்தல் - "மனத்தொடு வாய்மை
மொழிதல்" என்புழிப் போலக்கொள்க. ஆன -சொல்லுருபு. தான், ஏ;
இரண்டும் ஈற்றசை. மேல் வைப்பு முதலடியில் உள்கிட என்பதற்குச்
செயப்படு பொருள் - பொற்கழல். இங்ஙனம் இருவாக்கியங்களாகக்
கொள்ளாத இடத்து வினை முடிவு காண்டல் அரிது: