2851. புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
  பற்றிவாழும் பரமனைப் பாடிடப்
     பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
     சேவ தேறிய செல்வன் தானே.           7

     7. பொ-ரை: புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து,
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள, அனைவருக்கும்
மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க, விடையேறும்
செல்வனான அவன், நாம் மனம், வாக்கு, காயத்தால் செய்த
பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான்.

     கு-ரை: சே அது ஏறிய செல்வன் - விடையேறிய சிவ
பெருமான். பரமனைப்பாட - பரமனாகிய தன்னை நாம்பாட.
பாவமாயின் தீரப்பணித்திடும் - நம்மைப் பற்றியிருக்கும்
பாவங்களானவை பற்று விட்டொழிய ஆணைத்தருவான்; அது
பகுதிப் பொருள் விகுதி. பரமன் - "யாவர்க்கும் மேலாம் அளவிலாச்
சீருடையான்" (திருவாசகம்). தீரதல் - பற்றுவிடல். தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும். (தொல்.சொல்.318)