2856. கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
  நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.                     1

     1. பொ-ரை: நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர்
என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால்,இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத்
தனக்குத்தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும்,
விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே! மனத்தால் உன்னைச் சிந்தித்து
மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு
வணங்க அருள்புரிவாயாக.

     கு-ரை: கொட்டம் - வாசனை. நம்பனை உள்க, செல்ல,
உந்துக. சிவபெருமானை நாங்கள் தியானிப்பதனால் அதன்பயனாக
இந்த ஓடமானது ஆற்றைக்கடந்து செல்லத் தனக்குத்தானே
தள்ளப்படுவதாக. ஆண்டவனே! அகமும் உம்மைத் தொழுது
கொண்டிருக்கும். அகத்திலும் அன்றிப் புறத்திலும் கண்டு
தொழுவதற்கு அருள் புரிய வேண்டும். அவ்வருள் புரிவதற்கு முன்
இவ்வோடம் வந்தணையும்படியாகத் திருவருள் புரியவேண்டும் என
விரும்பினார். சிந்தையார், சிந்திக்கும் அடியார் எனலும் ஆம்.