2857. கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
  நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
     செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
     நல்கு மாறருள் நம்பனே.               2

     2. பொ-ரை: நீர்நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும்
திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற
நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத்
தனக்குத்தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து
மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு
வழிபட அருள்புரிவாயாக.

     கு-ரை: கோட்டகம் - வயலின் புறத்தே நீர்தேங்கி நிற்கும்
இடம். கொள்ளம் பூதூரைச் சேர்ந்த நாடு - கொள்ளம் பூதூர் நாடு.