2868. சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை
      யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு
    வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக
    லிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந் தகட
    வுளன்றே.                            2

     2. பொ-ரை: மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில்
ஆடியவனும், சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும்,
இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான்,
மலர்ப்பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற
திருப்புகலி நகரில், மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு
வீற்றிருக்கும் கடவுளே ஆவான்.

     கு-ரை: பூம்படுகல் - மலர்ப்பொய்கையில். படுகர்:- போலி.
காம்பு - மூங்கில், தோளியொடும் இருந்த கடவுள் - தோளியொடும்
புகலிநகர் இருந்த பெருமானே சாம்பலோடு நெருப்பிலாடினவனும்,
சடையில் பாம்போடு சந்திரனைச் சூடினவனும், பகடு ஏறினவனும்
ஆவான். மகாசங்காரகாலத்தில் உலகமெல்லாம் நெருப்புமயமாய்
இருக்கும்பொழுது அந்நெருப்பின் நடுநின்று ஆடினான்
சிவபெருமான் என்பது புராண வரலாறு. விடையைப் பசு என்றது
சாதி பற்றி. "பசு ஏறும் எங்கள் பரமன்" என இரண்டாந் திரு
முறையில் வருதலுங்காண்க.