2869. கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக்    
      கண்டானும்
மருப்புநல் லானையி னீருரி போர்த்தம
    ணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக
       லிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந் தவிம
     லனன்றே.                           3

     3. பொ-ரை: நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன்
எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும், அழகிய
தந்தத்தையுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக்
கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான், மலைகள் போன்று
உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில்
தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
விமலனேயாவான்.

     கு-ரை: கருப்பு நல்வார் சிலைக்காமன் - நல்ல நெடிய கரும்பு
வில்லையுடைய மன்மதன். கடைக்கண்டானும் - கடைக் கண்ணினால்
பார்த்தவனும். மருப்பு - தந்தம். மணாளன் - சிவபெருமானுக்கு ஒரு
பெயர். "நித்த மணாளர் நிரம்ப அழகியர்" (திருவாசகம் -
அன்னைப்பத்து) காமனைக் கடைக்கண் விழித்து எரித்தவரும்,
யானைத்தோலைப் போர்த்தவரும், தம்மீது விருப்பினையுடைய
உமாதேவியாரோடு திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே யாவர்.