2874. கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர்
       கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச
     யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக
     லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந்
     தானன்றே.                           8

     8. பொ-ரை: கல் போன்று திண்ணிய நெடிய பெரிய
திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர்
செய்தானும், வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ
வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற
அம்பைக் கொடுத்தவனும், அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில்
அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து
அருளுபவனான சிவபெருமானேயாவான்.

     கு-ரை: கல்லைப்போலும் திண்ணிய நெடிய பெரிய வெள்ளி
மலையின்கீழ் இராவணன் துன்பம் கண்டு அருளியவனும்; வேடனாகி
விசயனுக்குப் பொன்மயமான பாசுபதமென்னும் அம்பைக்
கொடுத்தவனும், திருப்புகலியுள் அன்னம் அனைய நடையையுடைய
உமாதேவியாரோடும் வீற்றிருந்தருளிய பெருமானும் அவனே ஆவான்.