2888. வெந்தவெண் ணீரணி வீரட்டா னத்துறை
       வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி
     காழியான்
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை
     ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும்
     பாவமே.                             11

     11. பொ-ரை:விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை
அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு
செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த
வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப்
பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும்
அன்பர்களின் பாவம் கெடும்.

     கு-ரை:சந்தம் எல்லாம் அடிச்சாத்தவல்ல-அழகிய சந்தப்
பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல (ஞானசம்பந்தன்)
சந்தம்-பண்பாகு பெயர். வெந்த-விதிப்படி செய்யப்பட்ட கற்பநீறு.
அந்தணர்-மாதவக்கலயர் முதலோர். அகரம் ஆறனுருபு பன்மை.
ஆடப் பாவம் கெடும்.