2889. கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா
  வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே. 1

     1. பொ-ரை:கேள்வி ஞானம் உடையவர்களும், நாள்தோறும்
நல்ல வேதத்தை ஓதுபவர்களும், கெடுதலில்லாத யாகத்தைச்
செய்கின்ற, எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களுமான
அந்தணர்கள், போற்றுகின்ற வேதநாயகர் திருவீழிமிழலையில்
வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவார். அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும், இறப்பும் செய்வார். கடலாழம்
கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு
அரியது. தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும்
அன்பர்கட்கு நெருக்கமானவர்.

     கு-ரை:கேள்வியர்-பலநூல்களைக் கேட்டறிந்தவர்கள்.
நாள்தொறும் ஓதும் நல்வேதத்தர்-நாள்தோறும் நல்ல வேதத்தை
ஓதுபவர்கள். கேடு இலா வேள்விசெய் அந்தணர்-கெடுதல் இல்லாத
யாகத்தைச் செய்கின்ற அழகிய கருணையையுடையவர்களாகிய
வேதியர். மறையோர் வாழும் வீழிமிழலையார்-திருவீழிமிழலையுள்
எழுந்தருளியவராகிய சிவபெருமான். உயிர்கட்கு எல்லாம் தோற்றமும்
கேடும் வைப்பார்-உயிர்களுக்கு உடம்போடு கூடிப் பிறத்தலையும்,
அழித்தலையும் வைத்தவர் உலகத்திற்குச் சிருட்டி கர்த்தரும் சங்கார
கர்த்தரும் ஆவர் எனவே-இரட்ச கர்த்தரும்-சிவபெருமான் ஒருவரே
யென்க. “படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை,
காப்போற்காக்கும் கடவுள் காத்தவை, கரப்போன்” எனவரும் சுருதி
வாக்கியங்களால் அறிக.(திருவாசகம்) கேள்வியர் முதல் வேதியர்
ஈறாக உள்ளவை திருவீழிமிழலை அந்தணர்களையும் வீழிமிலையார்
என்பது முதல் வருவன சிவபெருமானையும் குறிப்பனவாம்.
ஆழியர்-(ஆழங்காண முடியாத) கடல் போன்றவராயிருந்தாலும் தம்
அடியோற்றி என்பார்க்கு-தமது திருவடியைப் போற்றியென்று
சரண்புகும் அன்பர்களுக்கு. அணியர்-மிக அணியராகிக் காட்சி
கொடுப்பர். கேள்வியர் எனவே, சிந்தித்து, தெளிந்து, நிட்டை
உடையவர் என உபலக்கணத்தாற் கொள்ளலும் ஆம்.
முதலீரடிகளில் திருவீழிமிலை அந்தணர்களைப்பற்றிக் கூறப்படுகிறது.
தில்லை மூவாயிரம் திருவீழிமிழலை ஆயிரம் என்பது
பழமொழியாகலின் நாள்தோறும் ஓதுநல் வேதத்தர் என எடுத்துக்
கூறுகின்றார். இச் சிறப்பை “பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருட்சொல்லும் மிழலையாமே”. எனத் திருஞானசம்பந்தப்
பெருமான் கூறுதலும் காண்க. அந்தணர் என்ற சொல்லுக்கே
திருவள்ளுவர் “எவ்வுயிர்க்கும் செந்தண்மை (சீவகாருணியம்)
பூண்டு ஒழுகுபவர்” என்று பொருள் காண்கின்றார். வேத
அந்தத்தையணவுவார் என நச்சினார்க்கினியர் கூறுவர். இங்கு
இச்சொல் காரண இடுகுறியாகாது காரணக்குறியாய் நின்றது.