2891. நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
  வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே. 3

     3. பொ-ரை:இறைவர் நஞ்சுண்டதால் இருள் போன்ற கறுத்த
கண்டத்தையுடையவர். கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற
அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர்.
திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளுபவர். மைதீட்டிய
கண்களையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர்.
கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடை
முடியையுடையவர். அத்தகைய சிவபெருமானைத் தொழும்
அடியவர்களின் கொடு வினை யாவும் அழியும்.

     கு-ரை:நஞ்சினை உண்டு இருள் கண்டத்தர்-செய்து என்னும்
வினையெச்சம் பிறவினை கொண்டது. ‘வினையெஞ்சுகிளவியும்
வேறுபல் குறிய’ என்னும் தொல்காப்பிய விதிப்படி (சொல்)
அமைந்தது. கங்கை மஞ்சனம் ஆடிய செஞ்சடையார் எனக்கூட்டுக.
கங்கையால் அபிடேகம்கொண்ட செந்நிறமான சடையை யுடையவர்.
அங்கு-அசை. வல்லினைமாயும்-கொடிய பாவங்கள் நீங்கும்.