2894. வசையறு மாதவங் கண்டு வரிசிலை வேடனாய்
  விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.  6

     6. பொ-ரை:திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர்
அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி, அழகிய
வில்லேந்திய வேட்டுவ வடிவில் வந்து அவனுக்கு அருள்புரிந்தவர்.
தம்மை இசைத்தமிழால் பாடி, தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப்
பிறரைக் கேட்கும்படி செய்து, முரசொலிக்கத் திசைநோக்கித் தொழுது
ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பர்.

     கு-ரை:இசை வரவிட்டு-இசை பொருந்தும்படியாகப் பாடி, இயல்
கேட்பித்து-இயற்றமிழ்ப் பொருள்களை விண்ணப்பித்து. திசை நோக்கித்
தொழுது ஆடிப்பாடுவார் ஆகிய அடியாரது சித்தத்தின் கண் சேர்வர்.
கல்லவடம்-ஒருவகைப் பறை. முரசு, பேரி.