2901. தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
  பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே, 2

     2. பொ-ரை: சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை
மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை
அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும்
வில்லையுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட
இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும்.

     கு-ரை: தேவி-சீதை. வவ்விய-கவர்ந்த, தசமாமுகன், தென்
இலங்கை தன்னோடியைபின்மை மாத்திரை விலக்கிய விசேடணம். பூ
இயலும் முடி-வெற்றிமாலை அசையும் முடியையுடைய தலையை.
பொன்றுவித்த-தொலையச்செய்த. பழிபோய் நீங்குமாறு செய்த;
நிருமாணித்த. இராமேச்சுரம் என்னும் பெயரையுடைய திருக்கோயில்.
மேவிய சிந்தையினார்கள் தம்-இடைவிடாது பொருந்திய
சிந்தையையுடையவர்களின். மேல் வினை வீடும்-முன்னை
வினைகளாகிய சஞ்சிதமும், இப்பிறப்பில் ஈட்டப்படுகின்ற;
இனியீட்டப்படுவதாகிய ஆகாமிய வினையும் ஒருங்கேமாயும்
என்பதாம். மேல்வினை யென்பது-நுகர்ந்து கொண்டிருக்கும்
பிராரத்த வினையையும் குறிக்குமாதலின் அதுவும் அழியும் என்பதாம். வீடு மாறு துய்க்கவரும் இன்ப துன்பங்கள் சிவனருளெனக் கொண்டு
விருப்பு வெறுப்பின்றி யிருத்தலாம். தலத்தின் பெயர்-சேது.
(சேதுபுராணம், சேதுமான்மியம் முதலியவற்றால் அறிக.)
இராமேச்சுரம்:- ஈச்சுரம் அத்தலமேவிய கோயிலின் பெயர்.
‘திருப்பனந்தாள், திருத்தாடகையீச்சரம்’, “பட்டினத் துறை
பல்லவனீச்சரம்” என்பனவற்றால் அறிக. “தேடிமால் செய்த கோயில்
திருவிராமேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி
யாகுமன்றே” என்பது திருநேரிசை. “ஒயாதே உள்குவாருள்ளிருக்கும்
உள்ளானை” திருவாசகம். சிவஞானசித்தியார் ”தனதாகக்
கொள்வன்”. பூ-ஆகுபெயர். கோயில் மேவிய சிந்தையினார்
வினைவீடும் “ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே” என்ற
சிவஞான போதத்தால் அறிக. ஏஇயலும் சிலை அண்ணல்-அம்பைச்
செலுத்தும் வில்லையுடைய இராமன்.