2905. அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
  பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே. 6

    6. பொ-ரை: அலைகளையுடைய கடலில் அன்று அணை
கட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த
தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப்
போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில்
இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய
மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம்
நீங்கும்.

     கு-ரை: அலையையுடைய வளைந்த கடலை அணையால்
அடைத்து அன்று வழி செய்தவன் என்பது முதலடிக்குப் பொருள்.
பொருப்பணை முரசம் தலைக்கு உவமை. இனி பணை இலங்கும் முடி
எனப் பருத்து விளங்கும் முடியென்னலுமாம். அதற்கு “அறு
வேறுவகையின் அஞ்சுவரமண்டி” என்ற திருமுருகாற்றுப் படையைப்
போலப் பகுதியே வினையெச்சப் பொருள்தந்தது என்க. “இணை
இலி” சிவனுக்கு ஒரு பெயர் “இணையிலி தொல்லைத்தில்லோன்”
என்றது திருக்கோவையார். இணை - ஒப்பு. இலி - இல்லாதவன்.