2909. பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
  இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை                                  யல்லலே. 11

     11. பொ-ரை: தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன்
தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட
இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த
இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை,
திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப்
பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத்
துன்பம் சிறிதும் இல்லை.

     கு-ரை: தான் பெற்ற வரத்தின் ஆற்றலால், சூரியன் தன்
நகருக்கு மேலே நேரே செல்லக்கூடாது என ஆணைசெய்த
இராவணன் என்பது முதலடியில் குறித்த பொருள். இராமேச்சுரத்தை
ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை மனத்தோடு துதிக்க
வல்லவர்களுக்கு அல்லல் இல்லை என்பது திருக்கடைக்காப்புச்
செய்யுளின் கருத்து.